தெஹ்ரான்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி சிரியா எல்லை அருகே உள்ள நினேவா மாகாணத்தில் இருக்கும் அல் பாஜ் மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாகவும், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் செய்திகள் வெளியாகின.முன்னதாக கடந்த ஆண்டும் இதே போன்று பாக்தாதி படுகாயம் அடைந்ததாக செய்தி வெளியாகி பின்னர் அது உண்மை இல்லை என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாக்தாதி இறந்துவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆல் இந்தியா ரேடியோ ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இறந்துவிட்டார்: ரேடியோ ஈரான் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் நடத்திய தாக்குதலில் பாக்தாதி காயம் அடைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top