சென்னை: பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒருவழியாக முடிவடைந்ததை அடுத்து பொதுத்தேர்வு முடிவு மே 9-ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 30 வரை நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் 67 மையங்களில் நடந்து முடிந்துள்ளது. திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 



மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக பதிவு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. மதிப்பெண் விவரங்கள் மே 1ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மே 9ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

 
Top