சென்னை: உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் எப்படி நாடு திரும்புவது எனத் தெரியாமல் தவித்து வருவதாக ஏமன் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஏஞ்சலின் ஜெமிமா தெரிவித்துள்ளார். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமன் ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடி வருகிறது. உள்நாட்டுப் போர் காரணமாக ஏமனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. 

தமிழக நர்ஸ் கண்ணீர் பேட்டி

 இந்நிலையில், தமிழகத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த தயாளராஜன் - சுபாஷினி தம்பதியின் மகள் ஜெமிமா (27 ). இவர் ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். அவரை மீட்டு அழைத்து வரக்கோரி அவரது பெற்றோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் மனு கொடுத்து உள்ளனர். இந்நிலையில், ஜெமிமா தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக, ஏமனில் உள்ள தனது நிலை குறித்து விளக்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- நான் நர்சாக பணிபுரியும் ஏமன் ராணுவ மருத்துவமனையில் 29 இந்தியர்கள் வேலை செய்கிறோம். அங்குள்ள குடியிருப்பில் நாங்கள் தங்கி இருக்கிறோம். சனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. சனா நகரில் மட்டும் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் எங்களுக்கு உணவு கிடைக்கிறது. ஆனால் உள்நாட்டு போரின் காரணமாக பாதுகாப்பு இல்லாததால், ஏமனில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப விரும்புகிறார்கள். இந்தியர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை இந்திய அரசாங்கம் எடுத்து இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இங்குள்ள இந்திய தூதரகத்தை நாங்கள் தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. எனது பாஸ்போர்ட் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தான் இருக்கிறது. நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததால் பாஸ்போர்ட்டை வியாழக்கிழமை (இன்று ) தந்து விடுவதாக தெரிவித்தனர். சம்பள பணத்தையும் தந்துவிடுவதாக கூறினார்கள். சனாவில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை. சானாவில் இருந்து ஏடன் சென்றால் தான் இந்தியா திரும்ப முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் சண்டை நடந்து கொண்டு இருப்பதாலும், குண்டு வீச்சு நடைபெறுவதாலும் சாலை மார்க்கமாக செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் விமானத்திலும் செல்ல முடியாது. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் நானும் மற்றவர்களும் தவித்துக் கொண்டு இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top